You are here
Home > Article > இந்திய அறிவியல் சந்திக்கும் இன்றைய சவால்கள்

இந்திய அறிவியல் சந்திக்கும் இன்றைய சவால்கள்

மனிதன் மனிதனானதில் இருந்தே அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வந்துள்ளான்.. தீ மற்றும் சக்கரம் ஆதி நாகரிகத்தின் இரண்டு முக்கிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு. கற்கால துவக்க உலோக கால கட்டத்தை சார்ந்த சங்க இலக்கியம், வேதம் போன்ற இலக்கியங்களில் நான் யார்” “உலகம் எப்படி தோன்றியது” “நன்று தீது என்பது எவையவை?” என்ற கேள்விகள் நாகரிகத்தின் துவக்க கட்டம் முதலே அறிவுத் தேடல் இருந்துள்ளதை சுட்டுகிறது..

மண் திணிந்த நிலனும்நிலன் ஏந்திய விசும்பும்விசும்பு தைவரு வளியும்/ வளி தலைஇய தீயும்/ தீ முரணிய நீரும் என்று ஐம்பெரும் பூதத்து இயற்கை போலஎன புறநானூற்று பாடல் கூறுவதிலிருந்து ஐம்பெரும் பூதம் தான் இயற்கையின் எல்லா பொருள்களின் அடிப்படை என கருதும் துவக்க நிலை இயற்கை ஆராய்ச்சி மனப்பான்மை வெளிப்படுகிறது.

துவக்க நிலை வானவியல் ஆய்வு தடயங்கள் கற்கால நாகரிங்கங்களில் காணக்கிடைக்கிறது. “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் சீர்த்தகு சிறப்பிற பெரும்படை வாழ்ந்ததலென றீருமூன்று விகையிற் கல்லொடு” (தொல்., பொருள்., 60., நூ.அடி.19-21) என தொல்காப்பியம் கூறுகிறது. அதாவது நடுகற்களை எங்கு வேண்டுமோ அங்கே நடுவதில்லை. தேர்வான கல்லை தெரிவு செய்து அதனை சுத்தம் செய்து சரியான இடத்தில் முறையான திசையில் நடுகல் மற்றும் பதுகைகள் அமைக்கப்பட்டன.

எடுத்துகாட்டாக இன்றைய தென்னிந்திய பகுதியான முற்கால தமிழக கற்கால நினைவு சின்னங்கள் வடக்கு நோக்கி அல்லது கிழக்கு நோக்கி வாயிலை கொண்டு உள்ளது. இதிலிருந்து அந்தகாலத்தில் திசைகளை அறிந்து இருந்தனர் எனபது மட்டுமல்ல ஏதோ முறையில் திசைகளை அறியும் அறிவியல் முறையையும்  அறிந்து இருந்தனர் என்பது தெளிவு.

மேலும் வேதத்தில் முன் மொழியப்படுகின்ற ஒரு வழிமுறையை பார்ப்போம். நீளமான கழியினை நேரே செங்குத்தாக நிலத்தில் நடவேண்டும். கழியின்  ஆரத்தில் அந்த கழியை சுற்றி நிலத்தில் வட்டம் போட வேண்டும். இப்போது காலையில் ஒருமுறையும்,மாலையில் ஒருமுறையும் கழியின் நிழல் அந்த வட்டத்தை தீண்டும். வட்டத்தில் படும் அந்த இரண்டு புள்ளிகளை இணைக்கும் நேர்கோடு இட்டால் கிடைப்பது மிக சரியாக மேற்குகிழக்கு கோடு. இதன் செங்குத்து வடக்கு தெற்கு கோட்டை நமக்கு காட்டும். வேத கூடத்தை அமைக்கும் முன்னர் வேத, யாக கூடங்கள் கிழக்கு மேற்காக அமைய இவ்வாறு திசைகளை அறியவேண்டும் என வழிமுறை கூறுகிறது. இது போன்றதொரு அறிவியல் வழிமுறையில் தான் திசைகளை அறிய இயலும் அல்லவா? அறிவியல் சிந்தனையின் துவக்கம் இது.

நவீன தொலைக்காட்சி முதலியன பயன்படுத்தப்பட்டு வாக்கிய பஞ்சாங்க மழை முன்னறிவிப்புபோன்ற பத்தாம்பசலி செயல்களை சிலர் செய்வது போலவே அன்றும் அரசர்களை போற்றுதல் அல்லது வேத சடங்கு என்ற பயனற்ற பணிகளுக்கு அறிவியல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் பார்க்க தவறக்கூடாது என்றாலும் இவ்வாறான அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிதான் இன்று நாம் காணும் பல முன்னேற்றங்களுக்கு அச்சாணி என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

எந்த சூழலில் அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு மிளிர்கிறது? அறிவியல் வளர்ச்சி அடைய உகந்த சமூக காரணிகள் என்ன?அறிவியல் வழிமுறையிலும் ஏரண[1] வாத (logical reasoning) முறையிலும் அவசியமான மற்றும் போதுமான ” (necessity and sufficiency)என்னும் நிபந்தனை (condition) முக்கிய இடம் வகிக்கிறது. உயிர்வாழ ஆக்சிஜன் அவசியம்என்றாலும் “ஆக்சிஜன் மட்டுமே போதுமானதுஅல்ல. அதேபோல தாகத்தை தீர்க்க பாட்டில் நீர் போதுமானதுஎன்றாலும் அதுதான் அவசியம்என்று இல்லை. வெகு அரிதாகத்தான் ஒரு குறிப்பிட்ட தொகுதி நிபந்தனைகள் அவசியமான மற்றும் போதுமான நிபந்தனைகள்என்றாகி அமையும்.

குறிப்பிட்ட சமூகத்தில் அறிவியல் ஆய்வுகள் தழைத்தோங்க என்னென்ன அவசிய மற்றும் போதுமான நிபந்தனைகள்தேவைப்படுகின்றன என்பதை முதலில் அறிவியல் வரலாற்றிலிருந்து பார்ப்போம்.

ஒவ்வொரு குறிப்பிட்ட வரலாற்று கட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட சமூகம் அறிவியலுக்கு ஏற்றதாக இருந்துள்ளது. வேறு ஒரு  குறிப்பிட்ட வரலாற்று நிலையில் அதன் பொதுப்பண்பாடு அறிவியலுக்கு தடையாக இருந்துள்ளது. அறிவியல் தழைத்து ஓங்கிய ஒவ்வொரு பண்பாடுகள் குறித்தும் தனித்துவமான வரலாற்று காரணிகள் குறித்தும் விரிவாக நாம் பேச முடியும் என்றாலும் பொதுவே நான்கு காரணிகள் அவசியநிபந்தனைகளாக அமைகிறது என்பதை வரலாற்றை தொகுத்து பகுத்து ஆராயும்போது நாம் காணலாம்.

னி மனிதன் அல்லது குழுக்கள் தாம் விரும்பும் திசையில் தங்குதடையின்றி, அவர்களை வியப்பூட்டி ஆர்வம் ஏற்படுத்துகிற திசையில் ஆய்வு செய்ய அனுமதிக்கும் படியான அளவு அந்த சமூகத்தின் பொருளாதாரம் போதிய அளவு உயர்ந்து, குறிப்பிட்ட அளவு உபரி அறிவியல் ஆய்வு மற்றும் கலை படைப்புகளுக்கு ஒதுக்கப்படுதல்.

சமயம் சார்ந்த சிந்தனைகள் உட்பட, எந்த ஒரு கருத்தையும் கேள்விக்கு உட்படுத்தி ஆரோக்கியமாக விவாதிக்கும் கட்டற்ற சுதந்திர சிந்தனையை போற்றுகின்ற பண்பாட்டு சூழல். அதாவது தடையற்ற கருத்துரிமை.

குடத்துக்குள் தேரையாக சுருங்கி ஒடுங்கிவிடாமல் பல தரப்பட்ட பன்முக கருத்துக்களுக்கு இடமளித்து ஆதரவு தரும்  திறந்த சமூகம். அதாவது பல்வேறு பண்பாடுகளின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளை மதிக்கும் சகிப்புத்தன்மை

குறிப்பிட்ட அளவு கல்விபரவலாகி சமூகத்தில் எல்லோரும் கல்விபெற்று அதில் கணிசமான பகுதியினர் உயர்கல்வி பெரும் வாய்ப்பை பெற்று, கற்றோர் கூடி விவாதித்து பல்வேறு கருத்துக்களை விமர்சனம் செய்யும் நிலை…

 வரலாற்றின் போக்கில் இந்த நான்கில் ஒரு சிலமட்டும் அவ்வப்போது அமையும் தன்மையைக் காண்கிறோம். ஆனால் ஒரு சில நிபந்தனைகள் மட்டுமே அமையும் தருவாயில் அந்த சமூகத்தில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் அதன் தொடர்ச்சியாக சமூக முன்னேற்றத்துக்கும் இட்டுச்செல்ல போதுமானதாக அமைவதில்லை..

மேற்கூறிய இந்த நான்கு அவசியகாரணிகள் அனைத்தும் அமையும் நிலையில் அந்த குறிப்பிட்ட வரலாற்று கட்டத்தில் அச்சமூகத்தில் அறிவியல் தழைத்தோங்க போதுமானதாகவும் அமைகிறது. வரலாற்றில் சில அபூர்வ நிலையில் இந்த நான்கு காரணிகளும் ஒருங்கே அமைந்துவிட, அந்த சந்தர்ப்பத்தில் அந்த குறிப்பிட்ட சமூகம் அறிவியலில் கொடிகட்டி பறந்து வியப்படையும் அளவு சமூக முன்னேற்றத்தை அடைந்துள்ளதையும் வரலாறு நம் கண் முன் காட்டுகிறது.

ஆரியபட்டரின் இந்தியா

ஏனைய பண்பாடுகளைக் கண்ட நாம் இந்தியாவில் என்ன நடந்தது என அறிவதில் ஆர்வம் எழுவது இயல்பே. இந்திய வானியல் அறிஞராக துலங்கும் ஆரியபட்டரின் காலத்தை எடுத்துக்காட்டாக காண்போம்.

வைதீக மதமறுப்பு தத்துவங்களாக விளங்கிய துவக்க கால பௌத்தம், சமணம் முதலிய தத்துவங்கள் கோலோச்சிய காலகட்டம்தாம் ஆரியபட்டரின் காலம். அறிவியல், கலை எனப் பல தளங்களில் புத்தாக்கம் ஏற்பட்ட குப்தர்காலம் இது. சுமார் கிபி 500கட்டத்தை சார்ந்த இந்த காலகட்டத்தில்தான் காளிதாசரும் வாழ்ந்தார் எனப்படுகிறது. மனுநீதி யின் கோரப்பிடியில் அந்த சமூகம் சிக்கவில்லை.

ஆரியபட்டரின் காலத்தில் தான் நாளந்தா பல்கலைக்கழகம் தோன்றியது. கி.பி.427-ம் ஆண்டில் குப்த பேரரசரான குமாரகுப்தர் தோற்றுவித்த நாளந்தா பல்கலைக் கழகத்தை நாடி உலகம் முழுவதிலும் ஆராய்ச்சி மாணவர்கள் வந்தார்கள். நாளந்தா என்ற சொல்லுக்கு ‘அறிவை அளிக்கும் இடம்’ என்று பொருள்.

பிகார் மாநிலம், பாட்னா அருகே உள்ள இந்த பல்கலைக்கழகம் அடுத்த 900 ஆண்டுகள் வரை தொடர்ந்து செயல்பட்டு வந்தது.இந்த கல்வி நிலையத்தில் நுழைவுத் தேர்வு மூலம் எந்த வர்ணத்தை சார்ந்தவராக இருப்பினும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.   சீன யாத்திரிகர் யுவான்சுவாங் மற்றும் யி ஜிங் முதல் இங்கு படித்த வெளிநாட்டு மாணவர்கள் குறிப்பிலிருந்து இங்கு உயர்கல்வி மட்டுமே வழங்கப்பட்டது என்றும் சீனா, கொரியா, ஜப்பான், திபெத், இந்தோனேஷியா, பாரசீகம், துருக்கி, இலங்கை, மங்கோலியா முதற்கொண்டு உலகின் பல நாடுகளிலிருந்தும் இங்கு மாணவர்கள் வந்து தங்கி படித்தனர் எனவும் நாம் அறிகிறோம். கல்வி கட்டணம் எதுவும் வசூலிகப்படவில்லை என்பது மட்டுமல்ல இங்கு படிக்கும் எல்லா மாணவ மாணவியருக்கும் கல்வி உதவித் தொகை தரப்பட்டது.அனைத்து மாணவர்களுக்கும் தங்குமிடம், உணவு, உடை, மருந்து ஆகியவை கல்வியுடன் இலவசமாக வழங்கப்பட்டன. ஆராய்ச்சிக்கான விதையாக கல்வி அமையும் பொருட்டு எல்லா பாடங்களும் விவாதங்கள் மூலமாகவே கற்பிக்கப்பட்டனபுத்தமதத் தத்துவங்கள், இதர இந்தியத் தத்துவங்கள், மேற்கத்திய தத்துவம், மருத்துவம், சுகாதாரம், கட்டடக் கலை, சிற்பக் கலை, வானியல், வரலாறு, சட்டம்,மொழியியல், யோக விஞ்ஞானம் முதலிய இயல்கள் கற்பிக்கப்பட்டன. ஹர்ஷரின் காலத்தில் பல்கலைக் கழகத்தின் தேவைகளைக் கவனித்துக் கொள்ள 20 கிராமங்களின் வருவாய் ஒதுக்கப் பட்டிருந்தது. பல்கலைக் கழகம் புகழின் உச்சத்திலிருந்தபோது அதில் 10,000மாணவர்கள் படித்துவந்தனர். 2000 ஆசிரியர்கள் பணியாற்றினர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். நாளந்தா தவிர விக்ரமசீலம், உடந்தாபுரி,சோமபுரம், ஜகத்தாலம், வல்லடி ஆகிய பல்கலைகழகங்களும் இருந்தன. தெனிந்தியாவில் காஞ்சிபுரத்திலும் நாகப்பட்டினத்திலும் இதுபோல பெரிய பௌத்தப் பல்கலைக்கழகங்கள் இருந்திருக்கின்றன. இந்த காலகட்டத்தில் இறுக்கமானதோர் சமூக அமைப்பைக் கொண்டிருக்கவில்லை. வருணாஸ்ரம அமைப்பு சற்றே கட்டு தளர்ந்து சமூக அமைப்பில் நெகிழ்ச்சி இருந்தது.

வேதத்தில் உள்ளதால் ராகுகேதுகருத்து தான் உண்மை என அதற்கு அறிவியல் முலாம் பூச முற்படாமல் அந்த கருத்தை மறுக்கிறார் ஆரியபட்டர். இந்த திறந்த, சகிப்பு தன்மை உள்ள பண்பாட்டு சூழலில் தான் ஆரியபட்டர் ராகு, கேது புராணக்கதைகளை கண்டனம் செய்து சூரியசந்திர கிரகணம் இயற்கையில் ஏற்படும் நிழல் விளையாட்டே என நிறுவுகிறார். பாற்கடலில் திளைப்புறும் ஆதிசேஷனின் மீதுஉள்ள தட்டையான உலகு என்பதை மறுத்து உருண்டை பூமி..  மேலும்  தன்னைத்தானே சுழலும் பூமி எனும் புரட்சிக் கருத்துகளை முன்வைக்கிறார் ஆரியபட்டர்.

அவரது ஆரியபட்டீயம்நூலில் துவக்கத்தில் உள்ள கடவுள் வாழ்த்தை தவிர எங்கும் எதற்கும் கடவுள் துணைக்கு அழைக்கப்படவில்லை. எல்லா கருத்துக்களும் காண்டல்கருதல் அறிவியல் அளவைபடி (evidence) தான் வாதம் செய்யப்பட்டு நிறுவப்படுகிறது. “சித்தாந்த வானவியல்என்று அழைக்கப்படும் வானவியல் தத்துவத்தை நிறுவினார் ஆரியபட்டர். நவீன வானவியல் வருவது வரை அவரது சித்தாந்த வானவியல் தத்துவம் தான் இந்திய பரப்பில் கோலோச்சி இருந்தது.

ஆரியபட்டரின் காலத்தில் வாழ்ந்த மகாகவி காளிதாசர் சாகுந்தலம், விக்ரமோர் வசியம், மாலவிகாக்னிமித்ரம், ரகுவம்சம்,குமாரசம்பவம், மேகதூதம், ரிதுசம்ஹாரம் முதலிய நூல்களை  எழுதினார். தர்மகீர்த்தி, தர்மபாலர், சந்திரபாலர், குணமதி, ஸ்திரமதி,பிரபமித்திரர், ஜீன மித்திரர், நாகர்ஜுனர், வாகபந்து, புத்தகோஷர், பரமார்த்தர் முதலிய தத்துவ ஞானிகள் ஏரணம், தருக்கம், அளவையியல் என பல துறைகளில் மெச்சத் தகுந்த பல ஆய்வு நூல்களை படைத்தார்கள். சட்டம், தர்மம், காமம் பற்றிய நூல்கள் மட்டுமல்ல, கணிதம்,வான சாஸ்திரம், மருத்துவம், ரசாயனம், கட்டடக்கலை போன்ற துறைகளும் வளர்ந்தன.

குப்தர் காலத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில் களப்பிரர் காலம், சாளுக்கிய, பல்லவ, இடைகால சோழ அரசுகள் காலத்திலும் ஆங்காங்கே, சிறிது காலதிற்கு கல்வி கேள்வி சிறந்து அறிவியல் மற்றும் கலை வளர்ச்சி வெகுவாக ஏற்பட்டன. வைதீக மரபினை மறுக்கும் உலோகதயம், நியாயம், சார்வாகம், அஜிவிகம், பௌத்தம், ஜைனம் என பற்பல தத்துவ பார்வைகள் ஒன்றோடு ஒன்று விவாதக்களத்தில் இருந்தன. எந்த தத்துவமும் முழுமை அதிகாரம் பெற்று மற்ற தத்துவங்களை  தடை செய்து விலக்கி வைக்காமல் இருந்த திறந்த நிலை இருந்தது.

மனுநீதி புகுந்தபின்…

ஆயினும் இவ்வாறான மறுமலர்ச்சிகள் வர்ணாஸ்ரம தர்ம நிர்பந்தங்களினால் விரைவில் வாடி வதங்கி போயின. பிற்காலத்தில் பௌத்தம் சமணம் முதலிய மத செல்வாக்கு மங்கி மறுபடி வைதீக கருத்துகள் சமூகத்தில் தலையெடுக்க துவங்கியதும் நிலைமை மாறியது. வர்ணாஸ்ரம சமூக நிலை காரணமாக சுதந்திர சிந்தனை பெரும் சவாலை சந்தித்தன. ஜாதிய கட்டுப்பாடுகள் அறிவியல் வளர்ச்சிக்கு தடைகல்லாக மாறின. சமூகத்தில் யாரும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்ற நிலை மெல்லமெல்ல மாறியது.குறிப்பிட்ட வகுப்பினர் மட்டுமே உயர்கல்வி கற்கலாம் எனும் அவல நிலை வளர்ந்தது.

மனுநீதி சட்டங்கள் கோலோச்சும் முன்பு வரை பெண்கள் உட்பட பலரும் கல்வி கற்று சிறந்தனர். தமிழகச் சூழலில் காப்பிய இலக்கியத்தில் ஏனைய தத்துவ அறிஞர்களோடு வாதம் புரியும் மணிமேகலை, நீலகேசி போன்றோர் பெண்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆயினும் வளர்ந்து வரும் வர்ணாஸ்ரம கொடுமையால் மணிமேகலை ஆண் வேடம் இட்டுத்தான் வாதம் புரிய வேண்டிவந்தது. நீலகேசியோ அந்தணன் ஒருவனால் சூத்திரர்என கேவலப் படுத்தப்படுகிறாள்.

கி.பி. 6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என கருதப்படுகிற நீலகேசி, பௌத்தத்தின்  குண்டலகேசி எனும் காப்பியத்துக்கு மறுப்புச் சொல்லும் வகையில் எழுதப்பட்ட சமணநெறியைப் பரப்பும் நூல் ஆகும்காகந்தி நகரத்தில், பூதிகன் என்ற அந்தணன் வேத பாடசாலை நடத்தி வைதீக வேதமரபை போற்றி வருகிறான். “வேதம் ஆதியானது; தானாகத்தோன்றியது; அது மனிதர்களால் பாடப்பட்டது அல்ல” என்று பூதிகன் வாதம் செய்ய நீலகேசி மறுத்து கூறுகிறாள்.

வேதம் சுயம்புவாக (தானாகத்) தோன்றியது என்ற வாதத்தை, ஒரு உதாரணத்தைச் சுட்டிக்காட்டி மறுக்கின்றாள். ஒருவன் ஒரு ஊரின் நடுவில் உள்ள வீட்டின் முன்புறத்தில் எவரும் இல்லாத நேரத்தில் மலம் கழித்துவிட்டு போய் விடுகிறான். மலத்துக்கு சொந்தக்காரன் அங்கு இல்லை. மலம் மட்டும் இருக்கிறது. எனவே மலம் தானாகத் தோன்றியது என்று கூற முடியுமா? வேதமும், அந்த மலம் போன்றதே. மருத்துவர்கள், அந்த மலத்தைச் சோதித்து, மலம் கழித்தவன், நோயற்றவனா? நோய் வாய்ப்பட்டவனா என்று கூறி விடுவார்கள்ஆனால், அந்த மலத்துக்கு சொந்தக்காரன் பிரம்மாவின் வாயில் பிறந்தவனா? தோளில் பிறந்தவனா? தொடையில் பிறந்தவனா? காலில் பிறந்தவனா? என்று கூற முடியாது என வர்ணாஸ்ரம தர்மத்தை கேள்விக்குள்ளாக்குகிறாள். பிரம்மாவின் நான்கு உறுப்புகளிலிருந்து, நான்கு வகையான வருணத்தவரும் பிறந்ததாகக் கூறுவதைக் கேள்வி கேட்கிறாள் நீலகேசி. பிரம்மாவின் உறுப்புகளிலேயே ஏன் இந்த வேறுபாடு? பலா மரத்தில் வெவ்வேறு பகுதிகளான வேர், அடிமரம், கிளை, நுனிக்கொம்பு ஆகியவற்றில் காய்த்துக் கனிந்த பலாச்சுளையில் இனிப்பு ஒரே அளவாக உள்ளதே! பலாச்சுளையை சுவைத்துப் பார்த்துள்ளாயா? உன் பிரம்மா, பலா மரத்துக்கு உரிய தகுதிகூட அற்றவனா?”என்று விளசுகிறாள் நீலகேசி.

ஆதியும் அந்தமும் இல்லாதது வேதம் என்பது உண்மையானால், அது ஏன், ஒழுக்கக் கேடுகளை ஆதரிக்கிறது? வேதம், கொலை செய்வதை, மது குடிப்பதை, திருடுவதை, வன்முறையில் பெண்களுடன் புணருவதைத் தவறு இல்லை என்று கூறுகிறதே” என்று கூறி,அதற்கான வேதப் பாடல்களையும் ஆதாரத்துடன் முன் வைக்கிறாள் நீலகேசி.

மேலும் வேதத்திலிருந்து தோன்றிய நூல்கள் ஏன் ஒன்றுக்கொன்று முரண்பட்டுக் கிடக்கின்றன? என்று ஆதாரத்துடன் எதிர் கேள்வியை நீலகேசி தொடுக்க திணறிய பூதிகன் அவள் மீது வசை மாறி பொழிகிறான். நீலகேசியின் தர்க்கத்துக்கு எதிர் வாதம் தரமுடியாமல் திணறும் பூதிகன் “நாத்திகம் அல்லது சொல்லலை யாயின் முன் நான் பயந்த சாத்திரமாவது வேதம் அன்றோ அதுதான் சுயம்பு சூத்திரி நீயது வல்லைய லாமையின் சொல்லுகிலாப் போத்தந்தி யோஅதன் தீமை எனக் கூறிப் பொங்குகிறான்அதாவது “அடியேய், சூத்திரச்சியே, நீ வேதங்களை கற்று உணர்ந்து கொள்ளும் தகுதியும், உரிமையும் அற்றவள்; நீ ஒரு சூத்திரச்சி; கீழ் மகள்;ஆகவே வேதத்தை முறையாக உணர்ந்து கொள்ளாமல் நாத்திகம்[2] பேசுகிறாய்” என்று கடும்கோபத்தில் பிதற்றுகிறான்.

தாழ்த்தப்பட்ட தலித் பெண்ணுக்கு (சூத்திரச்சிக்கு) வேதத்தைக் கற்க தகுதியும் உரிமையும் இல்லை. அவர்கள் படித்தாலும் அவர்களுக்கு புரியாது. எனவேதான் அதில் குறை காணத் தொடங்கிவிட்டாள் என்ற கருத்துப்பட நீலகேசியின் இந்த பாடல் அமைந்துள்ளது. ‘வேதவாதச் சருக்கம்’ எனும் நீலகேசியின் இந்த பகுதி சுபக்கமாக அல்லாமல் எதிராளியின் கருத்தை கூறும் பரபகமாகதான் இருக்கிறது. எனினும்  வேதத்தை எதிர்த்தால் ‘நாத்திகர், சூத்திரர்’ என்று இழிவுபடுத்தும் அன்றைய நடைமுறையை சுட்டும் போக்குக்கு இலக்கியச் சான்றாக நீலகேசி விளங்குகிறது. அதாவது நால்வருண பேதம் கற்பிதம் செய்யப்பட்டு வர்ணாஸ்ரம அடிப்படையில் தான் வாதங்கள் வைதீகர்களால் உள்வாங்கப்பட்டன என நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ஆரியபட்டருக்கு பிறகு சுமார் எட்டாம் நூற்றாண்டில் வருணாஸ்ரம அமைப்பின் மேலதிகப் படிநிலை வளர்ச்சியாக வலுக்கொண்ட ஜாதிய உள்ஜாதிய அமைப்பு சமூகத்தில் பல பிரிவுகளை உருவாக்கியது. புராணம், மனுநீதி போன்ற தர்மசாஸ்திர நூல்களில் உள்ள செய்திகளை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கக்கூடாது என தடை செய்யப்பட்டது.

கி.பி பத்தாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு விஜயம் செய்த பாரசீக அறிஞர் அல்பெருணி அன்றைய இந்தியாவின் சாதி, மதச் சமூகத்தையும் அறிவியல் முன்னேற்றத்தையும் தனது நூலொன்றில் அற்புதமாகப் படம் பிடித்துள்ளார். அன்றைய அறிவியலாளர்களான வராகமிகிரர், பிரம்ம குப்தர் இருவரையும் பற்றிக் கூறும்போது, “இவ்வறிஞர்களுக்கு சூரிய – சந்திர கிரகணம் ஏன் ஏற்படுகிறது என்பது நன்றாகத் தெரியும். இவர்கள் அறிவியல் விவரங்களைக் கணக்கிட்டு கிரகணம் பற்றித் துல்லியமாக தமது ஆய்வு நூல்களில் விளக்கி வரும்போது திடீரென்று ராகு பாம்பு சூரியனை விழுங்குகிறது என்ற பிராமணர்களின் பழைய நம்பிக்கையைக் குறிப்பிடுகிறார்கள். தனது மனச்சாட்சிக்கு விரோதமாக வைதீக பார்ப்பனர்களுக்குப் பயந்து இப்படிச்சொல்ல வேண்டியிருப்பது பற்றி,” அல்பருணி வருத்தப்படுகிறார்.

வேதத்தில் உள்ள படி கிரகணங்கள் ராகுகேது பாம்பு சூரியசந்திரனை விழுங்குவது என்ற கருத்தையும் ஆதிசேஷன் மீது உள்ள தட்டை (flat) உலகம், மேரு மலையை சூரியன் சுற்றுவதால் இரவு பகல் உண்டகிறது என்ற மச்சபுராண கற்பிதங்களையும் மறுத்து பேசினால் என்ன வைதீகர்களுக்கு இனிக்கவா செய்யும்? எனவே மாற்றுக் கருத்துகள் புராண விருத்தம்”  என கண்டனம் செய்யப்பட்டு,விமர்சன பகுத்தறிவு பார்வையில், தண்டனைக்கு உரியதாக ஆக்கப்பட்டதுஇந்த பின்னியில் தான் ஆரியபட்டருக்கு பின் வந்த வராகமிகிரர், பிரம்ம குப்தர் முதலியோர் வைதீக பார்வையுடன் சமரசம் செய்து கொண்டனர் என விளங்கிக் கொள்ளலாம்.

17-ஆம் நூற்றாண்டில் இத்தாலியைச் சேர்ந்த கலிலியோ கத்தோலிக்க திருச்சபையினால் தண்டனைக்கு உள்ளாகி முண்டியிட்டுபூமி சுற்றவில்லைஎன மனச்சாட்சிக்கு விரோதமாக மன்னிப்பு கேட்டது போல் தான் வராகமிகிரர், பிரம்ம குப்தர் முதலியோரின் செயல்.

வைதீக கட்டுக்கோப்புகளின் தலையெடுப்பு, அதன் தொடர்ச்சியாக கல்வி கேள்விகளில் வரையறை ஏற்பட்டதன் காரணமாக சுதந்திர சிந்தனை மழுங்குதல், உயர் கல்வி ஒருசாராருக்கு மட்டும் என ஆகிப்போன நிலை, ஜாதியப் படிநிலை சமூக அமைப்பு என பல மாற்றங்கள் ஏற்பட்டு அறிவியல் மலர்வதற்கு ஏதுவான சமூக காரணிகள் மறைந்து அழிந்தன. அப்போதும் அங்கு தளிர் துளிர்த்து கொண்டுதான் இருந்தது என்றாலும் இந்தியாவில் அதன் பின் காடு போல பறந்து விரிந்து வியாபித்து வளரமுடியாமல் போனது.

இன்றைய இந்தியா…

பாரபட்சம் இல்லாமல் எல்லோருக்கும் கல்வி, அறிவியல் தொழில்நுட்பத்தில் முதலீடு, கருத்துரிமை, அனைத்து பண்பாடுகளையும் ஏற்கும் சகிப்புதன்மை, தீண்டாமை போன்ற மனித உரிமைகளை பாதிக்கும் பண்பாட்டு செயல்களுக்கு  எதிராக சமூக சீர்திருத்தம் என்பன விடுதலை அடையும் போது நாம் விரும்பி தெரிவு செய்த கனவு இந்தியா…

இன்றைய இந்தியாவில் அறிவியல் தழைத்தோங்க அவசியாமான போதுமான நான்கு காரணிகளின் நிலை என்ன?

இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை கண்டுள்ளது. ஆயினும் அதிலிருந்து போதுமான நிதி கல்விக்கும் உயர்கல்விக்கும் அறிவியல் ஆய்வுக்கும் சென்று சேரவில்லை. அறிவியல் தொழில்நுட்பத்திற்காக செலவிடப்படும் தொகை இந்தியாவில் வெறும் மொத்த தேசிய வருமானத்தில்(GDP)யில் 0.8% மட்டுமே. ஆனால் அருகிலிருக்கும் சீனா இருமடங்குக்கும் மேல் அதாவது சுமார் 1.98%செலவிடுகிறது. வரும்காலத்தில் இதை 2.5% என உயர்த்தவும் திட்டம் போட்டுள்ளது சீனாஎனவே இந்தியாவை பொறுத்தவரை (1)நிபந்தனை போதுமானதாக இல்லை எனலாம்.

எதையும் விமர்சனம் செய்யும் கருத்துரிமை மற்றும் அனைத்து பண்பாடுகலிளிருந்தும் சிந்தனைகளை வரவேற்றல் எனும் திறந்த போக்கு முற்றிலும் இல்லை எனக் கூற முடியாது என்றாலும் இவை எப்போதும் சவாலாக தான் இருந்து கொண்டிருகின்றன.ஆரோக்கியமான விவாத சூழல் கட்டற்ற விமர்சனம் முதலியவற்றை போற்றும் பண்பாட்டு தளம் பெரும் சவாலை சந்தித்து வருகிறது.ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பது போல டபோல்கர் , கோவிந்த் பன்சாரே, கல்பூர்கி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருப்பது கருத்துரிமைக்கான சவாலை சுட்டி நிற்கிறது.

அறிவியல் உலகின் எல்லா மனிதர்களின் பொதுச்சொத்து. எனினும் இந்துஅறிவியல், “தமிழன்அறிவியல், “இஸ்லாமியஅறிவியல் என அறிவியலையே கேலிசெய்யும் போக்கு கண்கூடு. ஆக (2) மற்றும் (3) நிபந்தனைகளை உறுதிசெய்ய நாம் மேலும் முயற்சி செய்யவேண்டும்.

விடுதலை அடைந்த பிறகு வெகுவாக கல்வி விரிவாக்கம் ஏற்பாடு தான் இருக்கிறது. எனினும் இன்றும் அனைவருக்கும் கல்வி என்பது வெறும் முழக்கமாக தான் இருந்துவருகிறது. 18-23 வயதுக்குள் உள்ள மக்கள் தொகையில் எவ்வளவு பேர் உயர்கல்வி கற்கிறார்கள் என்பது தான் GER குறியீடு. தற்போது இந்தியாவில் இது வெறும் 19% மட்டுமே. சீனாவிலோ இப்போதே இது 25%. 2030ஆம் ஆண்டுக்குள் சீனா 50%க்கும் மேல் எட்ட முற்படும்போது நமது இலக்கு 30% மட்டுமே. இந்த இலக்கை அடையவே நமக்கு சுமார் 800-1000பல்கலைக்கழகங்களும் 40,000  கல்லூரிகளும் தேவை. இந்த தேவையை பூர்த்தி செய்யவேண்டும் எனில் நாம் வருங்காலத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு கல்லூரி, மாதம் ஒரு பலகலைகழகம் என துவங்க வேண்டும். ஆனால் உயர்கல்விக்கு செலவிடும் முதலீடு கடந்த பல ஆண்டுகளாக அதிகரிக்கவே இல்லை. எனவே நமது இலக்கு எட்டக் கனியாக போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது.

மொத்த தேசிய வருமானத்தில்(GDP)யில் இந்தியா வெறும் 4.1 % மட்டுமே கல்விக்காக செலவிடுகிறது. மலேசியா 8.1 %, ஆப்ரிக்கா நாடான கென்யா 7% உலக சராசரி 4.9 % என்பதோடு ஒப்பிடும்போது இது வெகு குறைவு தான். அனைத்து தரப்பினரும் உயர்கல்வி பெரும் வாய்ப்பும் சமமாக இல்லை. ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. எனவே (4) குறித்தும் மேலதிக கவனம் தேவை.

 


[1]   ஏற்கக்கூடிய ஏல்புஎன்பதன் வடிவமே ஏரணம் (logic)

[2]   அன்றைய தத்துவ மரபில் நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு கோட்பாடு அல்ல. ஈஸ்வர வாதம் என்பது தான் கடவுள் மறுப்புகோட்பாடு. வேதங்களை ஏற்புடைய அளவைகளாக (பிரமாணமாக– acceptable evidence) கொள்ளாத தத்துவ பார்வைகள் நாத்திகம் எனசப்பட்டது.

 வி வெங்கடேஸ்வரன்

விஞ்ஞானி , விக்யான் பிரச்சார்

புதுடெல்லி

நன்றி: விழுது- இருமாத கல்வி இதழ் (நவ.டிச.2015)

Leave a Reply

Top