You are here
Home > இயக்கச் செய்திகள் > வானிலை குறித்த அறிவை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்: எஸ்.ஆர்.ரமணன் பேச்சு

வானிலை குறித்த அறிவை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்: எஸ்.ஆர்.ரமணன் பேச்சு

வானிலை குறித்த அறிவை மாணவர்கள் வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

சூலூரை அடுத்த அரசூரில் உள்ள கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மத்திய அரசின் நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு அறிவியல் இயக்ககம் ஆகியவை இணைந்து நடத்தும் மாநில அளவிலான மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இம்மாநாட்டை கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் பி.நடராஜன் துவக்கி வைத்தார். தொடக்க விழாவில், மத்திய அரசின் விஞ்ஞான பவனின் முதன்மை ஆராய்ச்சியாளர் டி.வி.வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டுக்கு தேசிய குழந்தைகள் அறிவியல் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.காத்தவராயன் தலைமை வகித்தார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கலந்து கொண்டு பேசியதாவது:

வானிலை குறித்த அறிவை மாணவர்கள் வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். தங்களுக்குத் தோன்றும் சோதனைகளை வீட்டில் இருந்தவாறே மாணவர்கள் மேற்கொள்ளலாம் என்றார். மேலும், வானிலை ஆராய்ச்சி மையத்தில் எவ்வாறு ஆராய்ச்சிகள் மேற்கொள்கின்றனர் என்றும் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்தும் ரமணன் விளக்கினார்.

இந்த மாநாட்டில், காகித பொம்மை செய்தல், பொம்மலாட்டம், மாயாஜால நிகழ்ச்சி, கணித விளக்க முறை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், கிட்டாம்பாளையத்திலுள்ள மத்திய அரசின் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்  மாநாட்டில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளும், கருத்தரங்கங்களும் நடைபெறவுள்ளன.

கே.பி.ஆர் கல்லூரி முதல்வர் பொம்மன்ன ராஜா உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

நன்றி: தினமணி நாளிதழ்

Leave a Reply

Top