You are here
Home > அறிவிப்புகள் > கோவை அறிவொளி வெள்ளிவிழா..

கோவை அறிவொளி வெள்ளிவிழா..

அன்புடையீர் வணக்கம்.

        இந்தியாவில் முதன் முதலாக 1989-ம் ஆண்டு கேரளா மா  நிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் முழு எழுத்தறிவுத்திட்டம் தொடங்கப்பட்டு 9 வயது முதல் 45 வயதுவரையுள்ள எழுதப்படிக்கத்தெரியாத சுமார் இரண்டு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தன்னார்வத்தொண்டர்கள் மூலம் கேரள சாஸ்த்திர சாகித்திய பரிஷத்தால்  ஓராண்டில் எர்ணாகுளம் மாவட்டம் முழு எழுத்தறிவு மாவட்டமாக மாற்றப்பட்டு, இந்தியாவிற்கு வழிகாட்டியாக அமைந்தது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் மத்திய- மாநில அரசுகளால் அந்தந்த மா நிலங்களில் மாவட்டங்கள் வாரியாக 1991-ம் ஆண்டுகளில்  மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அறிவொளி இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக லட்சக்கணக்கான மக்களுக்கு எழுத்தறிவிக்கும் பணிகள் தன்னார்வத்தொண்டர்களால் நிறைவேற்றப்பட்டன.

       கோவை மாவட்டத்தில் 1991-ம் ஆண்டில் அன்றைய கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.வி.சங்கர் இ.அ.ப. அவர்கள் தலைமையில் கோவை அறிவொளி இயக்கம் துவங்கப்பட்டு, கோவை மாவட்டத்தில் எழுதப்படிக்கத்தெரியாத சுமார் 6 லட்சம் மக்களுக்கு எழுத்தறிவிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இப்படி தமிழகம் முழுவதும், கல்வி விழிப்புணர்வு, பெண் கல்வி, எழுத்தறிவித்தல் போன்றவைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதன் காரணமாகவே இன்று தமிழகம் கல்வியில் பிற மா நிலங்களுக்கு வழிகாட்டுகிறது என்றால் அதற்கு 1991-ல் ஆரம்பிக்கபட்ட அறிவொளி இயக்கங்கள்தான் காரணம் என்றால் மிகையாகாது.

கோவை அறிவியல் திருவிழா (2)

       கோவை அறிவொளி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 25  வருடம் ஆகிறது. இதனுடைய வெள்ளிவிழாவினைக்கொண்டாடும் வகையில் வருகிற பிப்ரவரி மாதம் 7-ம் தேதி காலை 10 மணிக்கு கோவை அரசூரில் உள்ள கே.பி.ஆர். பொறியியல் தொழில் நுட்பக்கல்லூரியில் வெள்ளிவிழா நடைபெறுகிறது. இந்த வெள்ளிவிழாவில் கோவை அறிவொளி இயக்கத்தில் தன்னார்வமாக பணிபுரிந்த மத்திய திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கோட்ட ஒருங்கிணைப்பாலர்கள், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கிராம ஒருங்கிணைப்பாளர்கள், அறிவொளித்தொண்டர்கள், கலைக்குழுவினர் என அறிவொளி இயக்கம் வெற்றி பெற உழைத்தவர்களுக்கு பாராட்டுவிழாவும் நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கு அன்றைய கோவை மாவட்ட ஆட்சியராக இருந்து வழி நடத்திய அறிவொளி திரு.சி.வி.சங்கர் இ.அ.ப. அவர்கள் (தற்போது கூடுதல் முதன்மைச்செயலர்,தமிழகரசின் தொழில் துறை) தலைமை தாங்கி சிறப்புரை செய்யவுள்ளார். மேலும் இந்த விழாவில் முனைவர் வெ.ப.ஆத்ரேயா, பேரா.சு.மாடசாமி,  கல்வியாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, கவிஞர் முகில் மற்றும் அன்றைய மத்திய திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

           கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கோவை அறிவொளி இயக்கத்தில் தன்னார்வமாக பங்கெடுத்துகொண்டு எழுத்தறிவுப்பணியில் தங்களை இணைத்துக்கொண்ட ஒன்றிணைந்த கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளவர்கள்  வருகிற 7-2-2016 அன்று  கே.பி.ஆர். கல்லூரியில் நடைபெறும் கோவை அறிவொளி இயக்கத்தின் வெள்ளி விழாவில் பங்கெடுத்திடவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தொடர்புக்கு ஆ.ஈசுவரன், திருப்பூர் 9443024086 & நடராஜன், ஆர்.சரவணன், அ.கண்ணபிரான், கோவை,  முகமது பாதுஷா-மேட்டுப்பாளையம்..

Leave a Reply

Top