You are here
Home > அறிவிப்புகள் > மாற்றுக்கல்விக்கான மாநில வாசிப்பு முகாம்-15

மாற்றுக்கல்விக்கான மாநில வாசிப்பு முகாம்-15

ரோஹித் வேமுலாவின் மரணம் இதயமுள்ள ஒவ்வொரு மனிதனையும் துடிதுடிக்க செய்கிறது. புகழ்வாய்ந்த மத்திய பல்கலைக்கழகத்தில் நடந்த சாதிமேலாதிக்கதிற்கு அவர் பலியாகிவிட்டார். உலகில் உள்ள எல்லா மனிதர்களும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளை என அறிவியல் ஆய்வுகள் ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறது. இந்தப் புரிதலை நமது கல்விமுறை, அறிவியல் கல்வி உருவாக்கி இருந்தால் ரோஹித் மரணம் உட்பட சாதி தீண்டாமை அவலம் நாட்டில் நடைபெறுமா?

“டார்வினின் ஆழ்ந்த தத்துவங்கள் பாமரமக்களைப் பொறுத்தவரை மனிதன் வாலில்லா குரங்கிலிருந்து வந்தவன். குகை மனிதர்களிலிருந்து வந்தவன் என்ற அர்த்தமற்ற வாசகங்களுக்குள் முடிந்து விடுகிறது” இந்த வாசகம் இடம்பெற்றுள்ள நூல் ‘ஆதிமனிதன்’ (first man ). தமிழில் முதல் முதலில் வெளிவந்த மொழி பெயர்ப்பு நூலுக்கு (1958) சென்னை அருங்காட்சியக காப்பாளர் ஐயப்பன் என்பவர் எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி இது. பரிணாமம் பற்றி அறியத்தொடங்கி இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் நிலைமை என்ன? இது எவ்வளவு பெரிய வேதனை?எவ்வளவு பெரிய தேக்கம்?

தொடக்கப்பள்ளியிலேயே பரிணாம வளர்ச்சியை அறிமுகம் செய்கிறோம். அதன் சாரத்தை எத்தனை பேர் உள்வாங்கமுடிகிறது? அவ்வாறு உள்வாங்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்? மறுபுறம் இதன் சாரத்தை ஓரளவு உள்வாங்கிக் கொண்டவர்கள் மேலும் மேலும் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. மனித குல வரலாறு உயிரினங்களின் தோற்றம் வளர்ச்சி பற்றி நன்கு தேர்ச்சிபெற்று மாணவர்களுக்கும் மக்களுக்கும் சொல்லித் தரவேண்டிய மிகப் பெரும் சமூகக்கடமை நம் முன் உள்ளது. இதற்கான தரவுகள் இன்னமும் தமிழில் குறைவு என்பது ஒருவகை போதாமை. தமிழில் கிடைக்கும் தரவுகள் எத்தனை நமக்கு தெரியும்? எவற்றையெல்லாம் நாம் படித்தோம்?

இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றி உலகம் முழுவதும் பரவி வாழ்ந்துவரும் மனித இனதின் தோற்றம் வளர்ச்சி பற்றி தக்க சான்றுகளோடு நிரூபிக்க தமிழில் வெளிவந்துள்ள ஆகச்சிறந்த நூல் ‘மூதாதையரைத் தேடி…’. இந்நூலை முழுவதுமாக உள்வாங்குவது இன்றைய சமகாலத் தேவை. சாதிய மதவாத சவால்களுக்கு பதில்கூற தக்கதொரு ஆயுதம். அவ்வாறு முழுமையாக உள்வாங்க சாத்தியமான சூழல் நம்முடைய வாசிப்பு முகாம் மட்டுமே. எனவே இதற்கான வாசிப்பு முகாம் வருகிற பிப்ரவரி மாதம் 13 மற்றும் 14 தேதிகளில் கல்பாக்கத்தில் நடைபெறுகிறது.

15th Reading Camp

இந்நூலை எழுதியவர் ஆகச்சிறந்த புவியியல் அறிஞர் சுகி ஜெயகரன். பல்வேறு நாடுகளில் பணியாற்றி பழுத்த அனுபவம் பெற்றவர். நாம் அனைவரும் நன்கு அறிந்த சூழலியல் எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன் அவர்களின் தம்பி என்பது கூடுதல் சிறப்பு. இவர் வாசிப்பு முகாமில் ஒரு நாள் முழுக்க கலந்துகொண்டு கேள்விகளுக்கு சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார். உயிரினங்களின் தோற்றம் வளர்ச்சி பற்றி பல்வேறு நூல்களைக் கற்றுத் தேர்ந்தவரும், இதே பொருளில் தமிழகம் முழுவதும் சென்று நூற்றுக் கணக்கான வகுப்புகளை எடுத்தவரும் இதுதொடர்பான பல நூல்கள் தமிழில் வெளிவரக் காரணமாக இருந்தவருமான சேலம் சஹஸ்ரநாமம் அவர்கள் இருநாட்களும் வாசிப்பு முகாமில் கலந்து கொள்வது இம்முகாமின் சிறப்பு அம்சங்கள். ஆசிரியர்களுக்கான மாற்றுக் கல்வி முகாம் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திவரும் இந்த நிகழ்வில் இந்நூலின் முக்கியத்துவம் கருதி இதனை பழுதறக் கற்று பயன்படுத்திக்கொள்ள விரும்பும் அனைவரையும் அழைக்கிறோம்.

ஆசிரியர் அமைப்புகள், மாணவர், மாதர், வாலிபர் இயக்கங்கள் மற்றும் எழுத்தாளர் அமைப்புகள் தங்கள் அமைப்புக்கான கருத்தாளர்களை வளர்த்துக்கொள்ள விரும்பினால் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி பயன்பெறும்படி கேட்டுகொள்கிறோம். பதிவு கட்டணம் ரூபாய் 500/=.(நூலின் விலை ரூபாய் 290/- மற்றும் உணவு) இம்முகாமிற்காக இந்நூலை வெளியிட்டுள்ள காலச்சுவடு பதிப்பகம் 40 விழுக்காடு கழிவில் நூல்களை முகாமிற்காக தர சம்மதித்துள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்..

முன்பதிவு செய்ய: 7598225040 / 8903161283 / 9047140584

பேரா.என்.மணி
மாநில ஒருங்கிணைப்பாளர்
மாற்றுக்கல்விக்கான மாநில வாசிப்பு முகாம்
tnsfnmani@gmail.com

Leave a Reply

Top