You are here
Home > இயக்கச் செய்திகள் > என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா- ச.மாடசாமி

என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா- ச.மாடசாமி

ஆசிரியர்: பயந்த குடிமக்களை விரும்பும் பயந்த சர்வாதிகாரி….
கடந்த நவம்பர் 1 அன்று அதிகாலை 4 மணி இருக்கும்.. புதுக்கோட்டையில் நடைபெறும் அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழுவில் கலந்துகொள்வதற்கு கம்பம் பேருந்து நிலையம் வந்து விட்டேன். உடன் வர வேண்டிய நண்பர் வந்து சேர கொஞ்சம் தாமதம்.. வரும் வரை எதையாவது வாசிப்போம் என்று வாங்கி வைத்திருந்த ஆனந்த விகடனை எடுத்தேன்.. அதில் தோழர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் நேர்காணல்.. ஆர்வம் தொற்றிக்கொள்ள அவசர அவசரமாய்ப் படித்து முடித்தேன்..
அதுக்கு என்ன இப்போ.. அப்படிங்கிறீங்களா? அதிலிருந்த ஒரு தகவல் அப்படி.. பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் தாயார் இறந்த அன்று உடனிருந்த நண்பர்களுக்கு ஒரு கதை சொன்னாராம்.. அது ஆண்டன் செகாவ் எழுதிய “ஆறாவது வார்டு” எனும் கதை. மனநோயாளிகளைப் பற்றிய கதை அது. “நமது இந்தியக் குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒரு ஆறாவது வார்டாக, மனநோயாளிகளின் கூடாரமாக இருப்பதால் தான் அந்தக் கதையை என் மனம் தேர்வு செய்திருக்கிறது” என்கிறார் பி.கே. பேரா.ச.மாடசாமியின் என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா கட்டுரைத் தொகுப்பு நூலினை வாசிக்கும்போதும் இந்த மனநோயாளிகளின் கூடாரம் எனும் வார்த்தை அடிக்கடி சம்பந்தமில்லாமல் வந்துபோகிறது..
மிஸ்.. இந்த இடத்துல கையெழுத்துப் போடுங்கன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக அது கூட எனக்குத் தெரியாதா? நான் எத்தன டிகிரி படித்திருக்கிறேன் தெரியுமா எனக் கத்திக் கூப்பாடு போட்ட தலைமை ஆசிரியர் பின்னர் ஒரு நாள் இதை மனதில் வைத்து பாத்துமாவின் பெயரை கல்வி உதவித்தொகைக்கான பட்டியலில் இருந்து எடுத்துவிட்டு அனுப்பினார்.. அவ்வளவு பெரிய குத்தமா அது?
என்ன சார் எப்படி இருக்கீங்கன்னு கேட்டான் சாந்தகுமார்.. ஆத்தாடி பல வருசங்களுக்கு முன்னாடி படிச்ச பையன் நம்மை மதிச்சுக் கேட்கிறானேன்னு நாம் நினைக்க, உடனிருந்த நண்பர் ஒருவர் ஏண்டா வெண்ணெ வெளக்கெண்ண.. நல்லா இருக்கீங்களான்னு கேட்கிற அளவுக்கு நீ பெரியாளாடாண்ணு ஒரே அமர்க்களம்…
“கணந்தோறும் காயப்படுத்துகிறோம் குழந்தைகளை.. ஒவ்வொரு அவமதிப்பும் ஒரு மரணம்..” வசதியான குடும்பத்து மாணவர்களுக்கு குறைவான சம்பளம் பெற்றுக் கற்பிக்கும் ஆசிரியர்கள் சதை போட்ட மெட்ரிக் பள்ளிகளில்.. ! மத்திய வர்க்கச் சௌகர்யங்கள் பெற்ற ஆசிரியரிடம் வறுமை வாட்டும் குடும்பத்துப் பிள்ளைகள், மெலிந்த அரசுப்பள்ளிகளில்..! எத்தனை கோபம் வந்தாலும் வசதிவாய்ந்த மாணவர்களை அடிக்க ஆசிரியர் கைகள் உயர்வதில்லை.. சிறு கோபத்திலும் ஏழை மாணவர்கள் மீது கை பரபரத்துப் பாய்கிறது.. ஆசிரியர் என்பவர் “பயந்த குடிமக்களை விரும்பும் பயந்த சர்வாதிகாரி.. எனக்கும் சிறு அதிகாரம் வேண்டும். நானும் யாராவது சிலரை மிரட்ட வேண்டும். விரைவில் எனக்குக் கிடைத்தது அந்த அதிகாரம்.. சிவப்புப் பால்பாயிண்ட் பேனா வடிவத்தில்” என்கிறார் பேரா.ச.மாடசாமி. நமக்கு நாமே போட்டுக்கொண்டுள்ள பல முகமூடிகளைக் கழற்றி எரிகிறார் ச.மா. அக்கறை எனும் பெயரில் வெளிப்படும் நுட்பமான அதிகாரங்களை நமக்கு அடையாளக் காட்டுகிறார்..
செம்மலர், தி இந்து, புதிய ஆசிரியன், விழுது, சமத்துவக் கல்வி, நாங்கள் ஆகிய இதழ்களில் பேரா.ச.மாடசாமி எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.. அவருக்கே உரிய பாணியில் நமது ஏற்றத்தாழ்வுகள் மிக்க கல்விமுறையால், அதிகார மனோபாவத்தால் கண்ணை மறைக்கும் கட்டிகளை தனது எளிய வார்த்தைகளால் கரைக்க முயற்சிக்கிறார்.. ஜென் வகுப்பறைக் கட்டுரைகள் மிகமிக அருமையானவை.. மாணவர்கள் வாங்க மறுத்த வார்த்தைகளை அள்ளிக்கொள்ளச் சொல்கிறார்.. கடந்து போக வேண்டிய சில நிமிடங்கள்.. கட்டுரை தனிப்பட்ட வாழ்க்கைக்குமானவை. தமிழில் கல்வி தொடர்பான நூல்களில்லாக் குறையை தன் எழுத்துகளால் போக்கும் பேராசிரியர் மாடசாமி அவர்களுக்கு தமிழகத்தின் கல்விப்புலச் செயல்பாட்டாளர்கள் என்றும் கடமைப்பட்டவர்கள் ஆவர்..
வகுப்பறைகளில் கற்பிக்கும்போது மாணவர்களின் பக்கமும் அறிவொளிக் காலத்தில் வீதிகளில் கற்பிக்கும் போது மக்களின் பக்கமுமாக அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டைகளாக இருப்பவர்களின் பக்கம் நின்றே பேசுகிறார் மாடசாமி சார்.. அதற்கு காரணத்தையும் அவரே சொல்கிறார்.. “1980களில் வேறொரு சிவப்பு மை என் பேனாவுக்குள் நிரம்பியது.. அது என் சிந்தனையை மாற்றிய மை..”
அந்த மை அனைத்துப் பேனாக்களிலும் நிரம்பட்டும்…………!

புத்தகத்தைப் பெற: புக்ஸ் பார் சில்ரன், எண்.7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை- 18
புத்தகத்தின் விலை ரூ.50/- மட்டுமே..
வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ள : 9498002424
மின்னஞ்சல் : thamizhbooks@gmail.com
இணைய தளம்: www.thamizhbooks.com

தேனி சுந்தர் /9047140584
sundar.tnsf@gmail.com
நன்றி: thenisundar.blogspot.in

Leave a Reply

Top