You are here
Home > Article > திமிங்கலங்கள் மணப்பாட்டில் கரையொதுங்கியது ஏன்?

திமிங்கலங்கள் மணப்பாட்டில் கரையொதுங்கியது ஏன்?

கடந்த ஜனவரி 11 முதல் 13வரை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மணப்பாடு கடற்கரை பகுதியில் சுமார் 300 கிலோ முதல் ஆயிரம் கிலோ எடை கொண்ட 81 திமிங்கலங்கள் கரை ஒதுங்கி மக்களை வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்தின. சுமார் பதினைந்து கிலோமீட்டர் பகுதியில் இவை கரையொதுங்கின. இவற்றில் பல கடற்கரையில் மடிந்துபோக, சிலவற்றை மீனவர்கள் மீட்டுக் கடலில் சென்று விட்டபோதும் அவற்றில் சுமார் 45 மறுபடி கரையொதுங்கி பரிதாபமாக மடிந்துபோயின.

கூடங்குளம் அணு உலைக் கழிவுகள், ரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகள் என பல காரணங்கள்தாம் திமிங்கலங்கள் கரையொதுங்கி மடிந்துபோனதற்கு காரணம் என தவறாக புரளிகள் பரவிவருகிறது. கடல் மாசு அடைந்துவிட்டது எனவும் திமிங்கலங்களின் இறப்பு இதைத்தான் சுட்டுகிறது எனவும் வாட்ஸ்அப் புரளிகள் பரவுகின்றன. கன்னியாகுமரி, தூத்துக்குடி பகுதியில் மீன்களை வாங்கி உண்ணவேண்டாம் எனவும் போலி பீதியை இந்தப் புரளிகள் பரப்பிவருகின்றன.

புரளிகள் ஒருபுறம் இருக்கட்டும்; விளங்க முடியாதபடி கூட்டம்கூட்டமாக கரையொதுங்கும் திமிங்கலங்களைக் குறித்து சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அரிஸ்டாட்டில் வியந்துள்ளார். ஏன் சாகப்போகிறோம் எனத் தெரிந்தே பைலட் திமிங்கலம் போன்ற சிலவகை நீர்வாழ் விலங்குகள் கூட்டம்கூட்டமாக கரையொதுங்கி மடிகின்றன என்பது விலங்கின ஆய்வாளர்களுக்குப் பெரும் புதிராக இருந்துவருகிறது.

திமிங்கலம்…….

திமிங்கிலங்கள் [whales] ஏறக்குறைய 56 மில்லியன் வருடங்களாக வாழ்ந்துவரும் கடல் விலங்குகள் ஆகும். உலகின் மிகப்பெரிய வாழும் விலங்கு. திமிங்கலம்தான். இவற்றில் 80க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்தனி குணாதிசயங்களைப் பெற்று விளங்குகின்றன. கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் பல வண்ணங்களிலும் 24 மீட்டர் நீளம் முதல் 1.25 மீட்டருக்குக் குறைவான நீளம் வரையும் கடல் நீர் மற்றும் நதி முதலிய நன்னீரிலும் வாழக்கூடியதாகவும் உள்ளது.

திமிங்கிலங்களை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிப்பார்கள். ஒன்று பற்கள் உடையவை; மற்றது பல்லில்லா இனம். பற்கள் உடைய திமிங்கலத்தின் வாயில் இரு புறங்களிலும் வலிமையான தாடைகளுடன் கூடிய பற்கள் இருக்கும். பற்கள் உள்ள திமிங்கலங்கள் கணவாய் முதலிய இரையை வேட்டையாடி உண்ணும். பற்கள் இல்லாத வகையில் வாயில் வடிகட்டி போன்ற “பாலின்” (baleen) என்ற அமைப்பு இருக்கும். ஆவென வாயை திறந்து வைத்து கடல் நீரை வாயில் எடுத்து வடிகட்டி மீன் போன்ற இரையை உண்ணும்.

திமிங்கிலம் கடல்வாழ் உயிரினம் என்றாலும் இவை மீன் அல்ல. பல வகையிலும் மீன்களை ஒத்திருப்பினும்கூட இது மீன் இனத்தைச் சாராத பாலூட்டி ஆகும். எனவே விலங்குகள்போல நுரையீரல் வழிதான் ஆக்ஸிஜனைப் பெறுகின்றன. மீன்கள்போல செதில்கள் வழி கடலிலுள்ள ஆக்ஸிஜனைப் பிரித்து பயன்படுத்த முடியாது. எனவே ஆழ்கடல் வாழ் விலங்குகள் எனினும் திமிங்கலங்கள் அவ்வப்போது கடலின் மேற்புறத்துக்கு வந்து அதன் நாசித் துவாரத்தின் வழியாக காற்றை உள்ளிழுக்க வேண்டும்.

மனித இதயத்திலுள்ள 4 அறைகளைப் போலவே திமிங்கலங்களின் இதயத்திலும் 4 அறைகள் உள்ளன. நீரில் மூழ்கும்போது மூக்கு வழியாக நீர் உடலுக்குள் நுழையாமல் இருக்க மூடி போன்ற அமைப்பு திமிங்கலங்களுக்கு உண்டு. எனினும் பொதுவாக எல்லா பாலூட்டிகளுக்கும் இருக்கக்கூடிய பித்தப் பை (gall bladder) மற்றும் குடல் வால்வு (appendix) போன்ற உள் உறுப்புகள் திமிங்கலத்தில் இல்லை. தலையின் மேற்பரப்பில் அமைந்த சுவாசக் குழாய் (Blow hole) மூலம் தண்ணீரை 9 மீட்டர் உயரம் வரை நீர்க் கம்பம் (Water Spout) போல பீய்ச்சி அடிக்கின்றன. இந்த சுவாசக் குழாய்தான் அவற்றின் நாசித் துவாரம். இவற்றின் வழிதான் அவை காற்றை உள்ளிழுக்கின்றன. இந்த சுவாசக் குழாய் ஏனைய விலங்குகள்போல தொண்டை மூலம் நுரையீரலுடன் இணைக்கப்படவில்லை. திமிங்கலத்தின் சுவாசக் குழாய் நேரடியாகவே நுரையீரலுடன் பிணைக்கப்பட்டிருப்பதால் ஒரே நேரத்தில் திமிங்கலத்தால் உண்ணவும் சுவாசிக்கவும் முடியும்.

ஆயினும் கூடுதல் நேரம் “தம்” பிடித்து மூச்சுவிடாமல் இருக்கும் உயிரினம் திமிங்கலங்கள். ஏனைய உயிரினங்கள் எல்லாம் அதிகபட்சமாக ஒரு முறை சுவாசித்தால் பத்து நிமிடம் முதல் பதினைந்து நிமிடம் வரை சுவாசிக்காமல் இருக்க முடியும். அதிலும் மனிதர்களைச் சொல்லவே வேண்டாம். மிகவும் குறைவான சுவாசம் தாங்கும் திறமை உடையவர்கள். ஆனால் ஒரு முறை சுவாசித்து 80 நிமிடங்கள்வரை சுவாசிக்காமல் இருக்கும் ஓர் உயிரினம் திமிங்கலங்கள். நீண்ட “தம்” பிடித்து காற்றை உள்வாங்கி நுரையீரலை முழுவதும் நிரப்பி கடலுக்கு அடியில் இரை தேடி டைவ் செய்யும். தங்கள் இரையைத் தேடி 1000 மீட்டர் (1 கிலோ மீட்டர்) முதல் 2000 மீட்டர் (இரண்டு கிலோ மீட்டர்) ஆழம்வரை செல்லக்கூடிய ஆற்றல் பெற்றது. இவை தங்களின் உணவைப் பிடித்து உண்டதன் பின்னர் தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை காற்றை நன்கு சுவாசித்து ஆக்ஸிஜனை சேமித்து மீண்டும் ஆழ்கடலை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்கின்றன. ஆழ்கடலின் அடியில் இரையைத்தேடும் இந்த விலங்கின் உடல் அளவிடற்கரிய கடல் நீரின் அழுத்தத்தைத் தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது.

beachedwhales4

எப்போதும் நீந்திக்கொண்டு அதே சமயம் அவ்வப்போது கடலுக்கு மேலே வந்து மூச்சைப் பிடிக்க வேண்டும் எனபதால் திமிங்கலங்களால் ஏனைய விலங்குகள்போல ஆழ்ந்த உறக்கம் கொள்ளமுடியாது. இதுகாறும் திமிங்கலம் தூங்கவே தூங்காது எனக் கருதி இருந்தனர். சமீபத்தில்தான் அதன் ஒருபாதி மூளை விழிப்புடன் இருக்க மறுபாதி மூளை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் எனக் கண்டுபிடித்துள்ளனர். செங்குத்தாக நீருக்கு மேலே தலையை வைத்த நிலையில் இவை தூங்கும்.

ஆழ்கடல் விலங்குகளான இவற்றுக்கு அடுத்த சவால் பிள்ளை குட்டி பெறுவது. கடல் நீருக்குள் குழந்தையைப் பெறவேண்டும். பிறக்கும் குட்டி கடலின் உள்ளே தொபுக் என்று மூழ்கிவிடக் கூடாது. எனவேதான் மனிதர்களைப்போல தலை முதலில் வராமல் வால் முதலில் வரும்படி குழந்தை பிறக்கிறது. குட்டிகளுக்குப் பாலூட்டுவதும் சவால்தானே. தானும் நீந்தியபடி, குட்டியும் நீந்திய நிலையில் முலை சுரந்து பாலூட்டுவது கடினம் என்பதால் அவை பாலைப் பீய்ச்சி அடிக்கின்றன. அருகில் நீந்தும் குட்டிகள் அவற்றை வாயில் பிடித்து அருந்துகின்றன.

கண்கள் இருப்பினும் ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையைப் பிடிக்க திமிங்கலங்கள் பயன்படுத்தும் உத்தி எதிரொலி (echo location) ஆகும். தமது மூக்கு கொண்டு மூக்கொலி ஏற்படுத்தி அந்த ஒலி பிரதிபலித்து வருவதை கிரகித்து சுற்றுப்புறத்தை உணர்ந்து நீந்தும், இரையை இனம்கண்டு வேட்டையாடும்.

இந்தியர்கள் எப்போதும் சப்தமாக பேசுபவர்கள் என உலகெங்கும் கருத்து இருக்கிறது. உள்ளபடியே உலகிலேயே அதிக சத்தம் போடக்கூடிய உயிரினம் திமிங்கலம்தான். நீலத்திமிங்கிலம் தண்ணீருக்கு அடியில் எழுப்பும் ஒலி 150-க்கும் மேலான டெசிபலைக் கொண்டது. இது ஜெட் விமானம் கிளம்பும்போது ஏற்படுத்தும் சத்தத்தைக் காட்டிலும் கூடுதலாகும். ஆயினும் மனிதனின் காதுகளால் இதனை உணர முடியாது. அவ்வளவு சப்தமாக நீலத்திமிங்கிலம் வெளிப்படுத்தும் சப்தம் நீருக்கடியில் சுமார் 1000 கிலோ மீட்டருக்கும் மேல் செல்லும் என்பதால் அவை உலகின் பல பகுதிகளில் இருக்கும் வேறு நீலத்திமிங்கலத்தோடு நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். இவை சத்தம் எழுப்பும்போது அதற்குப் பதில் அளிக்கும் விதமாக தொலைதூரக் கூட்டத்தின் திமிங்கலங்கள் சப்தம் இடுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். காற்றைவிட அடர்த்தி மிகுந்த நீரில் சப்தம் வெகுவேகமாக பாயும். காற்றில் சுமார் நொடிக்கு 350 மீட்டர் வேகத்திலும் நீரில் 1,500 மீட்டர் வேகத்திலும் ஒலி பாயும். ஆழ்கடலில் சப்தம் மேலும் வெகுவேகமாக பாயும். அதுமட்டுமல்ல வெகு தொலைவுக்கும் பாயும். சுமார் எண்ணூறு மீட்டார் ஆழத்தில் சப்தம் சில ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுகூட பாயும். அதாவது சென்னையிலிருந்து பம்பாய்க்குத் தொலைபேசி இல்லாமலே உரக்கப் பேசிக் கொள்ளவதைப்போல திமிங்கலங்கள் கடலில் பெரும் தொலைவிலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும்.

பாடும் நீலத்திமிங்கலம்

நீலத்திமிங்கலம் போன்ற சில திமிங்கல வகைகள் அவ்வப்போது பாடவும் செய்கின்றன. கிட்டத்தட்ட அரை மணி நேரம் திமிங்கலம் தொடர்ந்து பாடுவதைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

மனிதனின் மூளையைக் காட்டிலும் அளவில், நிறையில் பெரிய மூளையுடைய பாலூட்டிகள் இரண்டே இரண்டுதான். ஒன்று யானை; மற்றது திமிங்கலம். உலகில் உள்ள பாலூட்டிகளில் (அல்லது உயிரினங்களில்) மிகப் பெரிய மூளையுடையது என்ற சிறப்பும் இதற்கு உண்டு. 1970 ஆம் ஆண்டு வாக்கில்தான் திமிங்கலங்கள் புத்திக் கூர்மையான விலங்கு என்பது உறுதிப்பட்டது. உயர் சிந்தனைத் திறம் சார்ந்த செரிபரல் கார்டெக்ஸ் பகுதி திமிங்கலங்களின் மூளையில் செறிவாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.


பைலட் திமிங்கலம்

வாயில் பற்கள் உடைய திமிங்கல இனத்தைச் சார்ந்தது பைலட் திமிங்கலங்கள். இளம் வெப்ப நிலையில் உள்ள வெப்பமண்டல கடற் பகுதிதான் இதன் வாழ்விடம். மிக ஆழமான கடல் மற்றும் ஆழம் குறைந்த கடற்கரை ஓரப்பகுதிகளை விடுத்து கணவாய் பெருமளவில் உள்ள பகுதிகளில் இவை காணக் கிடைக்கும். உலகளவில் கடல்களில் மொத்தம் சுமார் 200000 பைலட் திமிங்கலங்கள் உள்ளன என மதிப்பீடு செய்துள்ளனர்.

பைலட் திமிங்கலங்கள் சமூக கூட்டு வாழ்க்கை வாழ்பவை. சராசரியாக ஒரு குடும்பத்தில் சுமார் பத்திலிருந்து முப்பது திமிங்கலங்கள் இருக்கும். சில சமயம் இது ஐம்பதுவரை கூட உயரும். குறிப்பிட்ட குடும்பத்தில் சுமார் நூறு விலங்குகள் கொண்ட சிறப்பு குடும்பங்களையும் காண முடியும். இவை தாய் வழிச் சமூக முறைமையைப் பின்பற்றுகின்றன. ஒரு சில வளர்ந்த ஆண்கள் மட்டுமே இருக்க சுமார் எட்டு முதிர்ந்த பெண் திமிங்கலங்களின் வாரிசுகள்தான் ஒரு குடும்பத்தில் இருக்கும். அந்தப் பெண் திமிங்கலத்துக்கு பிறக்கும் பெண் குட்டிகள் பெரும்பாலும் அதே குடும்பத்தில் தங்கிவிட பொதுவே ஆண் குட்டிகள் வளர்ந்து பெரிதாகியதும் தாம் பிறந்த குடும்பத்தை விட்டு வேறு குழுவுடன் சேர்ந்துகொள்ளும்.

சுமார் ஆயிரம் அடி கடலுக்குக் கீழே சென்று இரை தேடும். கணவாய் தான் (squid) பைலட் திமிங்கலத்திற்குப் பிடித்தமான உணவு. சில வகை மீன்கள் மற்றும் ஒக்டோபஸ் முதலிய கடல்வாழ் இனங்களையும் உண்ணும். சில சிறப்பு காலத்தில் அவற்றைவிட பெரிய திமிங்கலங்கள் மற்றும் டால்பின்களைகூட வேட்டையாடும்.

ஐநூறு மீட்டர் ஆழம்வரை கடலின் உள்ளே நீந்தி செல்ல இயலும் ஆழ்கடல் விலங்கான பைலட் திமிங்கலம் மணிக்கு முப்பது கிலோமீட்டர் வேகத்தில் நீந்தும். வளர்ந்த முதிர்ந்த ஆண் திமிங்கலம் சராசரியாக சுமார் 7.2 மீட்டர் நீளமும் 3,000 கிலோ எடையும் கொண்டிருக்கும். பெண் திமிங்கலம் சுமார் 5.1 மீட்டர் நீளமும் 1,500 கிலோ எடையும் கொண்டிருக்கும். திமிங்கலக் குட்டிகள் சுமார் 1.5 மீட்டர் நீளமும் சுமார் 60 கிலோ எடையும் கொண்டிருக்கும்.

beachedwhales1

ஒலியை அனுப்பி அது எதிரே உள்ள பொருள்களின் மீது மோதி வெளிப்படும் எதிரொலியைக் கிரகிக்கும் (எக்கோ லோகேசன்) சிறப்பு பண்பு வாய்ந்தது பைலட் திமிங்கலங்கள். மிகவும் ஆற்றல் குறைந்த ஒலியைக்கூட உணரும் சிறப்பு உணர் உறுப்புகள் உண்டு. இவற்றைக் கொண்டு கடலின் ஆழம், திசை இவற்றைக் கணிக்கிறது.

பைலட் திமிங்கலம் உட்பட பற்கள் கொண்ட திமிங்கலங்கள் அவற்றிற்குரிய குறிப்பிட்ட குரல்தர ஸ்தாயியில் மூக்கொலி மற்றும் “கிளிக் கிளிக்” என்னும் சிறு ஒலி எழுப்பும். அடிப்புற நாசித் துவாரத்தில் கூடுதல் காற்றழுத்ததுடன் காற்றை அழுத்திச் செலுத்தி நாசியில் உள்ள குரலொலி இதழை அதிரச் செய்து திமிங்கலங்கள் ஒலியை எழுப்புகின்றன. கடலின் ஆழத்தில் செல்லும் திமிங்கலத்துக்கு புதிய காற்று கிடைக்காது என்பதால் நாசித் துவாரத்தின் வழி வெளிவிடும் காற்றை மறுசுழற்சி செய்துதான் அவை தொடர்ந்து ஒலி எழுப்ப முடியும்.

beachedwhales2

கரையொதுங்குதல்

உலகெங்கும் பல்வேறு இடங்களில் குறிப்பாக பைலட் திமிங்கலங்கள் கரையொதுங்கி கூட்டம்கூட்டமாக மடிந்துபோவது இயல்பு. இவை கூட்டாக குடும்பமாக வாழ்பவை. எனவே இந்தக் குழுவின் ஒரு உறுப்பினர் கூட திசை தவறி சென்றுவிட்டால் அதனைப் பின்தொடர்ந்து ஏனைய உறுப்பினர்கள் செல்லும். திணறும் விலங்கு விளிக்கும் அபாயக் குரல் கேட்டு ஏனைய விலங்குகள் உதவிபுரிய செல்லும். எனவே ஆபத்தில் குடும்பத்திலுள்ள எல்லா விலங்குகளும் கூட்டாக சிக்கிக்கொள்ளும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஐம்பது அறுபது விலங்குகளைக் கொண்ட குடும்பம் சில கிலோமீட்டர் தொலைவிற்கு விரிந்து நீந்திச் செல்லும். எனவேதான் கடற்கரையில் ஒரே ஒரே புள்ளியில் அல்லாமல் சில கிலோமீட்டர் தொலைவிற்கு இவை கூட்டம்கூட்டமாக கரையொதுங்குகின்றன.

1800– 2000 வரையிலான காலகட்டத்தில் 1452 ஆழ்கடல் பாலுட்டிகள் இந்தியக் கடற்பகுதியில் கரையொதுங்கின. இவற்றில் 166 பைலட் திமிங்கலங்கள். 1852இல் கொல்கத்தா பகுதியில் பைலட் திமிங்கலங்கள் கரையொதுங்கிய நிகழ்வே இதற்க்கு முன்னால் வங்காள விரிகுடாவில் பதியப்பட்டுள்ள முதல் நிகழ்வு. அதன் பின்னர் 1973இல் ஜனவரி 14 அன்று இதே மணப்பாடு பகுதியில் சுமார் 147 பைலட் திமிங்கலங்கள் கரையொதுங்கின.

சமீபத்தில் 2012இல் அந்தமான் கடற்கரையில் 40 பைலட் திமிங்கலங்கள் கரையொதுங்கின. அந்தமானின் எலிசபத் வளைகுடா ஆழம் குறைவான பகுதி. இங்கு 2012ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று இரவு முழங்கால் அளவு கடல் நீரில் வந்து கரைதட்டிய பல திமிங்கலங்களை மீனவர்கள் கண்டு அவற்றைக் கடலில் மீண்டும் சேர்க்க முயற்சி செய்தனர். முயற்சி பலிக்கவில்லை. அக்டோபர் 22 காலையில் எல்லாம் மடிந்துவிட்டன. 2012 அந்தமான் நிகழ்வை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கடலுக்கு அடியில் 4.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்படுத்திய அதிர்வுகள் மற்றும் காந்தப்புலக் கோடுகள் தடுமாற்றம் பைலட் திமிங்கலங்களை குழப்பி திசை தடுமாற செய்திருக்கும் என யூகம் செய்கின்றனர்.

பைலட் திமிங்கலங்கள் பொதுவே 16–44 Hz. அலைநீளங்களில் ஒலியை உணரும் தன்மை படைத்தவை. கடலுக்கு அடியில் பயன்படுத்தப்படும் ராணுவ சோனார் கருவி சில வகை நிலநடுக்கம் முதலிய இந்த அலைநீளங்களில் அதிக சப்தத்துடன் கூடுதல் ஆற்றலுடன் காது கிழிபடும் அளவில் ஒலியை ஏற்படுத்தும். இவ்வாறுதான் அந்தப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக திசை தடுமாறிய திமிங்கலங்கள் வழிதவறி ஆழம் குறைவான எலிசபத் வளைகுடாவிற்கு வந்து சேர்ந்து சிக்கிக் கொண்டது என ஆய்வாளர்கள் அனுமானம் செய்கின்றனர்.

beachedwhales3

நிலநடுக்கம் தவிர எல் நினோ நிகழ்வு போன்ற இயற்கைச்சீற்றம் கரை ஒதுங்கும் போக்கைத் தூண்டும் என சில ஆய்வளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தீவிர எல் நினோ ஆண்டான 1982-83இல் இதேபோல் பைலட் திமிங்கல வகை சார்ந்த திமிங்கலம் கலிபோர்னியா கடற்கரை பகுதியில் காணாமல் போயிற்று எனக் கூறுகின்றனர். இந்த ஆண்டும் தீவிர எல் நினோ இயற்கைச் சீற்றம் நடைபெறும் ஆண்டு என்பது குறிபிடத்தக்கது.

2016 மணப்பாடு நிகழ்வு

1962இல் கரையொதுங்கும் திமிங்கலங்களை ஆராய்ந்த டுடக் பான் ஹில் (Dudok van Heel) எனும் டச்சு ஆய்வாளர் மிதமான சரிவு கொண்ட கடற்கரைப் பகுதிகள் எதிரொலியை ஒத்திசைவாக பிரதிபலிக்கும் என ஆராய்ந்து தெளிவுபடுத்தினார். எனவே சரிவு குறைவாக உள்ள கடற்கரை பகுதியில் திமிங்கலங்கள் வந்து சிக்கினால் அவை திகைத்து போகும். வழி புரியாமல் திண்டாடும் எனக் கூறினார். இதைத் தொடர்ந்து மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தை சார்ந்த ஆய்வாளர்கள் மூன்று கிலோமீட்டர் தொலைவில் ஆழம் பூச்சியத்திலிருந்து வெறும் இருபது மீட்டர் வரை மட்டுமே உயரும் தன்மையுடைய குறை சரிவு கொண்ட கடற்கரை பகுதி திமிங்கலங்களின் எதிரொலி யுத்திக்கு சவாலாக இருக்கிறது என1990களில் நடத்தப்பட்ட ஆய்வில் தெளிவு படுத்தியுள்ளனர்.

beachedwhales5

மணப்பாடு பகுதியில் சரிவு இதைவிட மிகவும் குறைவு. தட்டை எனக் கூட சொல்லலாம். மூன்று கிலோமீட்டர் தொலைவில் ஆழம் பூச்சியத்திலிருந்து வெறும் ஐந்து முதல் பதினேழு மீட்டர்தான் அதிகரிக்கிறது. ஆதாம் பாலம் பகுதியும் சரிவு குறைவான பகுதி. எனவே இரையின் பின்னே துரத்தி தற்செயலாக அங்கு வந்துசேர்ந்த திமிங்கலங்கள் அந்த பகுதியின் கடற்கரை அமைப்பு காரணமாக அவற்றின் எதிரொலி யுத்தி குழம்பி திகைத்து கரையொதுங்கியுள்ளன என சிலர் கருத்துகின்றனர். ஆயினும் கூடுதல் தெளிவு பெற மேலும் ஆய்வுகள் தேவை என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஆய்வு அவசியம்

கப்பலின் மோட்டார் பிளேடு ஏற்படுத்தும் காயம், வைரஸ் நோய் என சில காரணங்களால் தனியே கடல்வாழ் பாலூட்டிகள் சிலசமயம் கரையொதுங்குவது உண்டு. இவை வேறு. ஆனால் தற்போது தூத்துக்குடியில் ஏற்பட்டது போல பத்து இருபது முதல் நூறு இருநூறு விலங்குகள் தாமே கரையில் ஒதுங்கி கூட்டாக மடியும் போக்கு புதிரானது.

பதியப்பட்ட வரலாற்றில் 1918இல் சாத்தம் தீவில் 1,000 பைலட் திமிங்கலங்கள் கரையொதுங்கியதுதான் இதுவரை மிகக் கூடுதல் கூட்ட கரையொதுங்கும் நிகழ்வு. இன்று அணுஉலை கழிவுனால் இறப்பு என புரளி உள்ளதுபோல கடலின் கடவுளான நெப்டியுனை கோபங்கொண்டு கொடுத்த சாபம் என முற்காலத்தில் ரோமானிய மக்கள் கற்பிதம் செய்தனர். திமிங்கலங்கள் கரையொதுங்கி தற்கொலை செய்துகொள்வது ஏன் என்பது மர்ம புதிராக இருக்கிறது,

சில ஆண்டுகள் முன்பு, தென் ஆப்ரிக்காவில் உள்ள கொமாட்ஜூ கடற்கரையில் பால்ஸ் கில்லர் வகை திமிங்கலங்கள், கும்பலாகக் கரை ஒதுங்கின. தண்ணீரைவிட்டு வெகுதூரம் வந்த இவை தரையில் தங்கள் தலையை மிக வேகமாக மோதி, சிதறுண்டு இறந்துபோயின. பதறிப்போன மக்கள், முயற்சிகள் செய்தும் பலனில்லை; அவை எல்லாம் தற்கொலை செய்துகொண்டன. இந்தச் சம்பவம் மிக விநோதமாக கருதப்பட்டாலும், பெருத்த வேதனையையும், கேள்விகளையும் எழுப்பியது. ஆய்வு மேற்கொண்ட டாக்டர் மாரியோ, கப்பலில் உள்ள சோனார் கருவிகளின் உரத்த சப்தம் திமிங்கலதிற்கு மன அழுத்தத்தைக் கொடுத்திருக்கும்; இரைச்சல் ஏற்படுத்தும் திருகு வலியிலிருந்து தப்பவே திமிங்கலங்கள் தற்கொலை செய்துகொண்டன என்றார்.

நவீன காலத்தில் இதுபோன்ற தற்கொலையைத் தூண்டும் செயற்கைச் சூழல்களைக் குறித்து நாம் கவலை கொள்ளும் அதே நேரத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பேகூட இவ்வாறு கரை ஒதுங்கும் போக்கு காணப்பட்டுள்ளது. கிபி 300இல் இவ்வாறு கிரீஸ் தேசத்தில் கரை ஒதுங்கிய திமிங்கலங்களை குறித்து வியந்து தனது ஆய்வுக் குறிப்புகளில் அரிஸ்டாட்டில் பதிவு செய்துள்ளார். எனவே இவற்றைச் சமகாலத்துச் சூழல் பிரச்னை என்று மட்டும் பார்ப்பது அறிவார்த்தமாக இருக்காது. மேலும் உள்ளபடியே சமீபகாலங்களில் கும்பல் கும்பலாக கரையொதுங்கி மடியும் நிகழ்வு அதிகரித்துள்ளதா என்பதையும் ஆய்வு செய்யவேண்டும்.

பொதுவே கரைக்கு அப்பால் நடுக்கடலில் வாழும் பைலட் திமிங்கலம் போன்ற கடல்வாழ் பாலூட்டிகள் குறித்த ஆய்வுகள் மிகச் சொற்பமே. ஆண்டுதோறும் உலகெங்கும் சுமார் 2000 கடல்வாழ் பாலூட்டிகள் கரையொதுங்குகின்றன. ஆயினும் திமிங்கலம் உள்ளடங்கிய 78 சிடேசிய (Cetacea) கடற் பாலூட்டியினத்தில் சுமார் 10 மட்டுமே பெரும்பாலும் கரையொதுங்குகின்றன. பற்கள் இல்லாத திமிங்கலங்கள் கூட்டம்கூட்டமாக கரை ஒதுங்குவதில்லை. கரையொதுங்கி மடியும் பெரும்பாலான திமிங்கலங்கள் பற்கள் உடைய வகைகள் ஆகும். அதிலும் பைலட் திமிங்கலங்கள்தாம் பொதுவே கரையொதுங்கும் விலங்காக திகழ்கிறது. எனினும் இதுவரை சுமார் ஐம்பது சதவிகித நிகழ்வுகளுக்குத் தான் ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஏன் கரையொதுங்கின என்பது கண்டுபிடிக்கப்பட்டுளது. பைலட் திமிங்கலம் மட்டுமல்ல, டால்பின் குடும்பம் முழுவதுமே போதிய ஆய்வு செய்யப்படவில்லை. எனவே நமக்கு தரவுகள் குறைவாகத்தான் இருக்கிறது என பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature – IUCN) கவலை தெரிவிக்கிறது.

beachedwhales6

உலகின் ஆகப்பெரிய விலங்கினம்

நீலத்திமிங்கலம் 30 மீட்டர் நீளம் (சரசரியாக 100 அடி) உடைய உலகின் பெரிய விலங்கு; இதன் எடை சுமார் 30 யானைகளின் எடைக்கு சமம். நீலத்திமிங்கலத்தின் இதயம் மட்டும் 600 கிலோகிராம் இருக்கும். இதன் இதயம் நிமிடத்திற்குப் பத்து தடவை மட்டுமே துடிக்கும் என்பது வியப்பானது. ராட்சச உருவு கொண்ட நீலத்திமிங்கலத்திற்கு ஒரு நாள் இயக்கத்திற்கு, 1.5 மில்லியன் கலோரி சக்தி தேவைப்படுகிறது. ஒப்பீட்டுக்கு மனிதனுக்கு வெறும் 2500 கலோரி மட்டுமே தேவை என்பதை நினைவில் கொள்க.

விஞ்ஞானி.த.வி.வெங்கடேஸ்வரன்

தமிழில் அறிவியலைப் பரப்பி வரும் தத்தமங்கலம் விஸ்வநாதன் வெங்கடேஸ்வரன்

புது டெல்லியிலுள்ள மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் விக்யான் பிரச்சாரில் முதுநிலை விஞ்ஞானி;

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை

அனைவருக்கும் அறிவியல் சிந்தனையைப் பரப்பி வருகிறார்.

tvv123@gmail.com

நன்றி: இப்போது இணையதளம்..

Leave a Reply

Top